கிருஷ்ணகிரி, ஆக. 9 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முன்னோடி வங்கி சார்பில் 2025-26 ம் ஆண்டிற்கான ரூ.42486.85 கோடி மதிப்பிலான முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் . ச. தினேஷ்குமார் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.11669.40 கோடியும், விவசாய முதலீட்டு கடன் ரூ.4457.59 கோடியும், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.66.17 கோடியும், விவசாய இதர கடன்கள் ரூ. 550.70 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடுரூ.16743.87 கோடியும், சிறு,குறு நடுத்தர தொழில் கடன் ரூ.6620.25 கோடியும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.130.72 கோடியும், இதர கடன்கள் ரூ.1586.44 ஆக மொத்தம் முன்னுரிமை கடனாக ரூ.25081.27 கோடி மற்றும் முன்னுரிமை சாரா கடனாக ரூ.17405.58 கோடி ஆக மொத்தம் ரூ. 42486.85 கோடி அளவுக்கு வருடாந்திர கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும், வேளாண்மையில் இயந்திர மயமாக்கல், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் உதவி பெற உறு துணையாக இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் பிரேந்திரகுமார், ரிசர்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அலுவலர் விவேக், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னா பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், தாட்கோ மேலாளர் கே.எஸ். வேல்முருகன் மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.