மார்த்தாண்டம், ஜூலை 10 –
குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (75) ரப்பர் வியாபாரி. நேற்று மாலை உண்ணியூர்கோணம் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்தார். பின்னர் அவர் பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டீபனிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அதில் தான் அந்த பகுதியை சேர்ந்த பிரபலமான நபரின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மேலும், தான் ஏடிஎம் கார்டு கொண்டு வராததால் பணம் இல்லை என்றும், பணம் இருந்தால் கொடுக்கும்படியாகவும் பொருள் வாங்கி விட்டுக் பின்னர் கொடுக்க வேண்டிய பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவர் தன்னிடம் இருந்த ரூ.1,400 ஐ கொடுத்தார். பணத்தை பெற்ற நபர் பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்டீபன் குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மேலும் அந்த மார்ம நபரை குறித்து விசாரித்து வருகின்றனர்.