மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 –
மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பகுதி அக்கர விளயை சேர்ந்தவர் சந்திரமோகன் (42). டெம்போ டிரைவர். இவர் நல்லூர் பஞ்சாயத்து 7-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது குறித்து சம்பந்தப்பட்ட ரோடு காண்ட்ராக்டிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காண்ட்ராக்டர் பதில் எதுவும் கூறவில்லை.
இதற்கு இடையே சம்பவதினம் சந்திரமோகன் சென்னித் தோட்டம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 7-வது வார்டு உறுப்பினர் புஷ்பலதா என்பவரின் கணவர் சுரேஷ்குமார் (52) என்பவரின் தூண்டுதலின் பேரில், அங்கு வந்த முழங்குழியைச் சேர்ந்த ரத்தீஷ் குமார் (47) திடீரென தகாத வார்த்தைகள் பேசி திட்டியதுடன் கைகளால் சந்திரமோகனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சந்திரமோகன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் டிரைவரை தாக்கிய ரத்தீஷ் குமார் மற்றும் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.