மார்த்தாண்டம், ஜுலை 4 –
மார்த்தாண்டம் சிங்களேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர். இவர் வீட்டின் மாடி பகுதியில் உள்ள அறையை ஒரு தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வங்கியில் நெய்யூர் பகுதி சேர்ந்த ஆஷா (32) என்பவர் ஊழியராக வேலை செய்தாராம். தற்போது அந்த வங்கி திவால் ஆனதால் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அங்கு வந்த ஆஷா பூட்டப்பட்டிருந்த அறையை திறந்து அங்கு இருந்த பொருட்கள் தனக்கு சொந்தம் எனவும் தனது சம்பளம் தரவில்லை எனக் கூறி தகராறு செய்து பொருட்களை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது பொறியாளருக்கும் ஆஷாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஆஷா அலுவலகத்தை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த கண்ணாடிகளை சேதப்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று விட்டார். இது குறித்து பிஜி ஜோசப் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர்.