குழித்துறை, செப். 23 –
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24 முதல் 27 வரை நடைபெற உள்ளது. குழித்துறையில் பேரணி பொதுக்கூட்டத்துடன் செப்.24 புதனன்று தொடங்கும் பொது மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சங்கத்தின் அகில இந்திய தலைவரும் முன்னாள் கேரள அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி, அகில இந்திய துணை தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தரராமன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா திங்களன்று குழித்துறையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பெண்கள் மீதான தாக்குதல்கள் வரதட்சணை கொடுமைகளில் தமிழக காவல் நிலையங்களை அணுகும்போது பெண்களுக்கு ஆதரவாக அல்லாமல் ஆணாதிக்க மனநிலையில் செயல்படுவதை காண முடிகிறது. பெண்களுக்கு நீதி மறுக்கப்படுவது தொடர்கிறது. குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்சோ வழக்குகளில் காவல் நிலையங்கள் நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பது குறித்த ஒரு சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வலியுறுத்தும் மாநாடாக அமையும்.
அண்மைக்காலமாக சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் ஒரு சிறப்பு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவையில்லை. இப்போது உள்ள சட்டங்களே போதுமானது என கூறினார். அப்படி முதல்வர் கூறிய அடுத்தநாளே திருநெல்வேலியில் சாதி ஆணவ படுகொலை நடந்தது. இப்போதும்கூட கவின் செல்வ கணேஷ் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்த வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக நீதியை முன்னெடுத்திருக்கும் திமுக அரசு சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை மாநாடு வலியுறுத்தும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு, முழுமையாக பெண்களுக்கு எதிரான அரசாக மாறி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நறைவேற்றப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த முடியாத பல்வேறு சிக்கல்களை கொண்டதாக உள்ளது. பிற்போக்குத்தனமான மநுவாத கருத்துகளை அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியாக புகுத்தப்படுகிறது. கிராமப்புற பெண்கள் அதிக அளவில் பயனடைந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டம் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பயனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும். நகர்புற வேலை உறுதி திட்டம் உருவாக்கி நகர்புற ஏழைகளுக்கு உதவிட வேண்டும். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானங்களை மாநாடு நிறைவேற்றும் என்றார். தமிழக பெண்கள் இயக்க வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தம் மாநாடாக இது அமையும் என்றார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், பணியிடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் உட்புகார் குழுக்களில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். பழிவாங்கலுக்கு உள்ளாகாமல் அவர்களை பாதுகாத்து நீதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். உட்புகார் குழுக்களை கண்காணிக்க வேண்டும். அத்தகைய ஒரு ஏற்பாடு தற்போது இல்லை. தமிழக அரசு அதை ஏற்படுத்த வேண்டும் என்றார்



