மயிலாடுதுறை,செப். 15 –
மயிலாடுதுறை அருகே அரையபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பிகை என்கின்ற மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து கடந்த 12-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளத்துடன் சென்று கோபுர கும்பத்தை அடைந்தனர்.
பின்னர் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதேபோன்று மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு வண்டிகாரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ கோவிந்தன் ஆலய மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



