திங்கள்சந்தை, ஆக. 7 –
இரணியல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி (40) என்ற தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியை இரணியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தாய், மகள், மகன், மருமகள் என்று 4 பேர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வந்துள்ளனர். இதை தனது முன்னாள் மாணவர் ஒருவர் கூறியதன் பேரில் உண்மை என்று நம்பிய நாகலட்சுமி இந்த கும்பலை தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது அவர்கள் மலேசியாவில் கேஷியர் வேலை இருப்பதாகவும் அதற்கு ரூ. 2.50 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய நாகலட்சுமி ரூ.2 50 லட்சத்தை ரொக்கமாகவும் வங்கி கணக்கு, கூகுள் பே மூலமாகவும் கொடுத்துள்ளார். பின்னர் மலேசியாவுக்கு நாகலட்சுமி அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் கூறியது போல் கேஷியர் வேலை கொடுக்கவில்லை. மீண்டும் அங்கே வைத்து ஓட்டலில் சர்வர் வேலை வாங்கி தருவதாக கூறி இங்குள்ள கும்பலின் உறவினர் ஒருவர் மீண்டும் பணம் பறித்துள்ளார்.
பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் சில நாட்களிலேயே சொந்த ஊர் திரும்பிய நாகலட்சுமி இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பையும் வரவழைத்து பேசினர். அப்போது அந்த கும்பல் ரூ. 1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து உள்ளனர். இது சம்பந்தமாக இரணியர் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இது குறித்து நாகலட்சுமி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை என் ஆர் ஐ அதிகாரி ஆகியோருக்கும் புகார் கொடுத்தார். ஆனாலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பண மோசடி செய்யும் நோக்கத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி வெளிநாட்டிற்கு இந்திய தொழிலாளர்களை கடத்தி செல்லும் குடிப்பெயர்வு சட்டம் 1983, பிரிவு 10-ன் படி அரசின் பதிவு பெறாத போலி முகவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 படி மனித கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மோசடி செய்த பணத்தை மீட்பதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.