மயிலாடுதுறை, ஆகஸ்ட் 08 –
தமிழ் வருடத்தில் ஒன்றான விசுவாவசு வருடத்தில் நிலச்சரிவுகள் எரிமலை விபத்துக்கள், வெள்ள அபாயங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் அதிக அளவில் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் என்றும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள், புதுவிதமான நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என தர்மபுரம் ஆதீன 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கேட்டுக்கொண்டார். மேலும் இயற்கை பேரழிவுகளை தடுக்கும்படி இறைவன் வேண்டும் பொருட்டு 121 சிவாலயங்களில், ருத்ர பாராயணம் செய்யப்பட்டு, ருத்ர ஹோமம் செய்து ருத்ர அபிஷேகம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி 38-வது ஆலயமாக மயிலாடுதுறையில் சமயக்குரவர்களால் பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைத்த பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் புழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஹோமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சைவ ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.