போகலூர், ஜுலை 11 –
ராமநாதபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் துறையின் மூலம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூன்று நாள் கருத்தரங்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமையை ஏற்று கருத்தரங்கு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில்:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மூன்று நாள் நிகழ்ச்சியாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்திடும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை உடன் ஒருங்கிணைந்து வருவாய்த்துறை, நீதித்துறை, கல்வி, சுகாதாரம், காவல், விவசாயம், தொழிலாளர் நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி ( ராமநாதபுரம்), ரதிதேவி ( சிவகங்கை), மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், சமூக நலத்துறை கண்காணிப்பு அலுவலர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.