கிருஷ்ணகிரி, ஜூலை 23 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை மறைக்கும் விதமாக பெண் குழந்தைகளின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றுகளில் பிறந்த தேதியினை முறைகேடாக திருத்தம் செய்தல், பெயர் மாற்றம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஒளிநகல் கடை, கணினி தட்டச்சு கடை உரிமையாளர்கள் மற்றும் e-சேவை மையங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை மறைக்கும் விதமாகவும், சட்டப்படியான நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காகவும் பெண் குழந்தைகளின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றுகளில் பிறந்த தேதியினை முறைகேடாக திருத்தம் செய்தல், பெயர் மாற்றம், திருத்தம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஒளிநகல் கடை, கணினி தட்டச்சு கடை உரிமையாளர்கள் மற்றும் e-சேவை மையங்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி வழக்கு பதிவு செய்யப்படும். இச்சட்டத்தின் படி குழந்தை திருமணத்திற்கு உதவி செய்த அடிப்படையில் கடை உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடையின் உரிமம் இரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.