சென்னை, ஜூன் 28 –
கடந்த மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் அமலா, வாடகை ஆட்டோ ஓட்டி பிழைக்கும் தானும் தன்னைப் போன்ற பல பெண்களும் சொந்த வாகனம் இல்லாததால் பொருளாதார சிரமத்தில் இருப்பதாகவும் கூறினார்.
அமலாவின் இந்த அனுபவம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அமலாவின் கோரிக்கையை பரிசீலித்து தனது நிதியிலிருந்து ஒரு புதிய ஆட்டோ ஒன்றை வழங்க உத்தரவிட்டார்.
இன்று ஆளுநர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்ட அமலா ஆளுநர் ஆர்.என். ரவியின் கையால் புதிய ஆட்டோவின் சாவியை பெற்றார். மேலும், மாணவ மாணவியர்களுடன் அந்த ஆட்டோவில் சிறிய பயணமொன்றையும் ஆளுநர் மேற்கொண்டார்.
ஒரு பெண் வைத்த சாதாரண கோரிக்கையை கடந்து செல்லாமல் தமிழில் பேசியதையும் கவனித்து என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்ததற்காக ஆளுநருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் அமலா.