நாகர்கோவில், மே 14
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 15வது நிதி குழு மூலம் பொது சுகாதாரத் துறைக்கு புதிய கட்டிட பணிகளுக்கு 10 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு தலா ரூ. 150 லட்சம் நிதி வழங்கி தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட அர்மநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கிளியூர் வட்டாரத்திற்குட்பட்ட உண்ணாமலை கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்லங்கோடு, அழகப்பபுரம், பளுகல், ஓல விலை ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.75 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செம்மன்காலை, வில்லுக்குறி -1, அம்பாலக்கடை, அண்டூர், மாத்தூர் ஆகிய 5 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட ரூ. 45 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பைங்குளம், தேவி கோடு, புத்தந்துறை (கிள்ளியூர்), கீழ கிருஷ்ணன் புதூர் ஆகிய 4 துணை சுகாதார நிலையங்களுக்கும், புதிய துணை சுகாதார நிலைய கட்டிட பணி தொடங்குவதற்கு தலா ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிட பணிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, மற்றும் நகராட்சி அமைப்புகள் மூலம் விரைவில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.