கிருஷ்ணகிரி மே13:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.ஜி.பள்ளி கிராமத்தில் கன்று விடும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கன்றுகளை மருத்துவ குழு பரிசோதனை செய்து போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கன்றுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய கன்றுகளுக்கு முதல் பரிசாக 40,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக முப்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக சுமார் 40க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இருபுறமும் தடுப்புகள் அமைத்து அதன் நடுவே கன்றுகளை ஓட விட்டனர். பி.ஜி.பள்ளி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள 18பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் ஆர்வமுடன் கன்று விடும் திருவிழாவை காண குவிந்தனர்.
பி.ஜி.பள்ளியில் கன்று விடும் திருவிழாவை தொடர்ந்து மூன்று வருடங்களாக மாதவன், கர்நெல், முஜிப், சிக்கந்தர், பரத், பார்த்திபன் உள்ளிட்ட பி ஜி பள்ளி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். சீறிவரும் கன்றுகள் ஓடி வரும்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து கன்றுகளை உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.