ராமநாதபுரம், ஆக. 5 –
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்குளம் வலசை பிள்ளை மடம் தில்லை நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்குளம் வலசை ஊராட்சி பிள்ளை மடம் தில்லை நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு மற்றும் உடையார் வலசை இந்த மூன்று கிராம மக்கள் அன்றாட கடல் தொழிலுக்கு சென்று வருகின்றனர். இங்கு சர்வே எண் 139/1 ல் உள்ள 14.18 ஹெக்டேர் அளவு கொண்ட நிலத்தின் வழியாகத்தான் கோயில் திருவிழா அம்மன் கரகம் ஆண்டுதோறும் செல்லும். கிராமத்தில் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளதால் கரவலை சீசன் காலத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த இடத்தை கடலோர காவல் படை கையகப்படுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலி அமைத்து வருகிறார்கள். இதைச் சுற்றி சுவர் எழுப்புவதால் மழைக்காலங்களில் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதோடு அருகில் முகத்துவாரம் உடைந்து கடல் நீர் மற்றும் காற்றின் வேகம் அதிகமாகும் நேரத்தில் ஆற்றுக்கரை வலியை அறியான் சவுக்கு வரை கடல் நீர் வந்து போகும். தடுப்பு சுவர் எடுப்பதால் கடல் நீர் இரண்டு கிராமங்களுக்கும் உள்ளே வரும் அபாயம் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் எங்கள் ஊர் திருவிழா காலங்களில் பயன் அடையவும் அன்றாட தொழிலுக்கு செல்லும் பாதையை தடையின்றி ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிட்டள்ளனர்.