இராமேஸ்வரம், ஜுலை 26 –
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரியன் மீன் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு. பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் சுமார் 8 கிலோ எடை கொண்ட அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கி இருந்தது. இந்த மீனுக்கு வால் இல்லாமல் வெறும் துடுப்பு மட்டுமே இருந்தது.
இதுகுறித்து மீனவர் மாரியப்பன் கூறுகையில்: ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மீனை காணலாம். இது வலையில் சிக்குவது மிகவும் அரிது. அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இந்த மீனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். காற்று அதிகம் வீசும் சீசனில் இந்த மீன் வலையில் கிடைக்கும். இந்த மீன் வலையில் சிக்கியது குறித்து அறிந்த மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் வந்து ஆராய்ச்சிக்காக இந்த மீனை எடுத்து சென்றுள்ளனர். அவர்களிடம் அந்த மீனை ஒப்படைத்து விட்டோம் என்று கூறினார்.