விழுப்புரம், ஆகஸ்ட் 5 –
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டட் நகர் ஊராட்சியில் தார் சாலை போடாமல் அதிகாரிகள் அலை கழிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் டட் நகர் ஊராட்சியில் பழுதடைந்த சாலையை புதிய சாலை போட்டு தராமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என்று டட் நகர் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள மங்களபுரத்தில் இருந்து டட்நகர் பாளையம், டட்நகர், டட் கூடலூர் ஆகிய எங்கள் 3 கிராமத்திற்கும் 2 கி.மீ-ல் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பதாக புதிதாக தார் சாலை போடப்பட்டது பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த ஓராண்டாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் புதிய தார்சாலை போட்டு தரும்படி கடந்த ஓராண்டாக பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை தார் சாலை போடவில்லை. கடந்த ஆறு மாதமாக டெண்டர் விட்டாயிற்று கான்ட்ராக்ட் கொடுத்தாயிற்று விரைவில் தார்சாலை போடப்படும் என்று அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லுகிறார்கள். ஆனால் இதுவரை தார் சாலை போட்டப்பாடில்லை, புதிய தார் சாலைக்கு உத்தரவு வந்துவிட்டது என்று உத்தரவின் நகலை காட்டுகிறார்களே தவிர சாலையில் அதை பார்க்க முடியவில்லை.
மேலும் இந்த சாலை தான் மூன்று கிராமத்திற்கும் பிரதான சாலை குறிப்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வரும் பிரதான சாலை இதுவே. கடந்த மூன்று மாதமாக கண்டிப்பாக சாலை போடப்படும் என்று உறுதி அளிக்கிறார்களே தவிர இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சினிமாவில் வடிவேலு சொல்வது போல் வரும் ஆனால் வராது என்ற பாணியில் எங்கள் கிராமத்தின் தார் சாலையின் நிலைமை இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் அனைவரும் இந்த தரமற்ற சாலையினால் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். விரைவில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. மீண்டும் மழைக்காலத்தை காரணம் சொல்லி இன்னும் எத்தனை மாதம் கடத்துவார்களோ என்று டட் நகர் கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இனியும் காலம் தாமதிக்காமல் தார்சாலை போட்டு தரும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.



