கிருஷ்ணகிரி, செப். 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா மற்றும் பார்டர் காட்டூர் சோதனைச் சாவடி திறப்பு விழா நடைபெற்றது. பர்கூர் காவல் ஆய்வாளர் இளவரசன், பர்கூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
72 கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களின் மூலம் திருட்டு, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பொதுமக்கள், தனியார் பள்ளி நிறுவனங்கள், ஜவுளி கடை சங்கங்கள், கிரானைட் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் அவர்களின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கந்திகுப்பம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி, நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பர்கூர் வட்டாட்சியர் சின்னசாமி மற்றும் சுதாகர் பர்கூர் உட்கோட்ட காவலர்கள், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



