பரமக்குடி, ஜூலை 28 –
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மக்கள் நூலகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் மூன்றாவது புத்தகத் திருவிழா பரமக்குடி ராஜா மகாலில் நேற்று காலை தொடங்கியது. விழாவிற்கு வரவேற்பு குழு தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, மக்கள் நூலக தலைவர் நல்லாசிரியர் செசந்தியாகு, தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் காந்தி, கிளை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு செயலாளர் பசுமலை வரவேற்றார்.
விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் புத்தக அரங்கினை திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தினமும் காலை மாலையில் கலை இலக்கியம், கட்டுரை, ஓவியம், சிற்பம், விளையாட்டு என்று பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து 10 நாட்கள் புத்தகம் விற்பனை நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான ஸ்டால்கள் அமைத்து இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு குழு பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.