ஈரோடு, நவ. 14 –
மத்திய மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, டி ஆர் இ யு கோட்ட செயலாளர் முருகேசன், எல்ஐசி வடக்கு கிளை செயலாளர் தமிழரசு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகம், தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கோபிநாத், எல்ஐசி தெற்கு கிளை செயலாளர் சாந்தகுமார், பி இ எப் ஐ மாவட்ட செயலாளர் பூவேந்திரன், வருமான வரி ஊழியர் சம்மேளனம் சரக செயலாளர் மேபிள் குயினி பயஸ் மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொது துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் பொது துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் கோவில்கள் என்று மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கூறினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொது துறை நிறுவனங்களை பா ஜ க அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை செயல்படுத்தி வருகிறது. நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ந் தேதி பொது துறை பாதுகாப்பு தினமாக நினைவு கூறும் வகையில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கன்வீனர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல் ஐ சி ஊழியர் சங்க தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.



