மார்த்தாண்டம், ஜூலை 3 –
நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (46). சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா (37) ஊரில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். வடிவேல் மாதந்தோறும் மனைவிக்கு 35 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொடுப்பாராம். இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி தனக்கு சொந்தமான 4 பவுன் செயினை கேட்டுள்ளார். அப்போது செயின் உட்பட 35 பவுன் நகைகளை தனது தம்பிக்கு கொடுத்ததாகவும் அதை செவ்வாய் (நேற்று முன்தினம்) காலை அவர் தரலாம் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீஜாவின் தம்பி விஜு விடம் வடிவேல் கேட்டபோது நகையை நான் வாங்கவில்லை ஐம்பதாயிரம் ரூபாய் கடன் தான் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து மனைவியிடம் என்னிடம் கேட்காமல் நகைகளை யாருக்கும் கொடுக்க கூடாது என கூறிவிட்டு வழக்கம்போல் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்றனர்.
மறுநாள் காலை 7 மணி அளவில் பார்த்தபோது மனைவியை வீட்டில் காணவில்லை. வீட்டில் உள்ளே உள்ள கழிவறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கருகி கிடந்துள்ளார். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் ஸ்ரீஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீஜாவிடம் 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? என தெரியவில்லை. இரவல் வாங்கியவர் நகைகளை கொடுக்காத காரணத்தால் மனமுடைந்த ஸ்ரீஜா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.