நாகர்கோவில், டிசம்பர் 10 –
கன்னியாகுமரி மண்டலத்திற்கான தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, பி.எம். எஸ். உள்ளிட்ட சங்கங்கள் போட்டியிடுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் அதிக வாக்குகள் பெறும் சங்கம் தொழிற்சங்க அங்கீகார சங்கமாக கருதப்படும். கன்னியாகுமரி மண்டலத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் 1, 2, காப்புக்காடு 1, 2 மற்றும் உடையார் உள்ள விளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் உள்ள தலா ஒரு குடோன் வீதம் 6 குடோன்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள், நுகர் பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள், நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் என சுமார் 217 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 9 மணி முதல் ரகசியமான முறையில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலை ஒட்டி நுகர்வோர் வாணிப கழக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


