பரமக்குடி, ஆக. 3 –
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனை தமிழ்நாடு நகர்நல சுகாதார செவிலியர் சங்கத்தினர் நேரில் சந்தித்து பணப்பலன்கள், பணி நிரந்தரம்
கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.
தமிழ்நாடு நகர்நல சுகாதார செவிலியர் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்த மனுவில், நகர்புற சுகாதார செவிலியர் 3 முதல் 10 வருடங்களாக நகர்நல செவிலியராக பணிபுரிந்து வருகிறோம். கர்ப்பிணி தாய்மார்கள் பராமரிப்பு மற்றும் சிக்கலான கர்ப்பிணிகள் பராமரிப்பு, கர்ப்பிணிகளை அட்மிஷன் முதல் மகப்பேறு வரை பேணிக் காப்பது தாய், சேய் நலப் பிரிவு, குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு ஆகியவற்றை தினந்தோறும் அனைத்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து சுகாதார பணிகளையும் சிறப்பாக செய்து வந்ததுடன், கொரோனா தடுப்பூசி முகாம்களை சிறப்பாக நடத்தி அதற்கான சான்றிதழை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.ஒவ்வொரு சுகாதார செவிலியர்க்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளதால் பணிச்சுமையும் அதிகரித்து உள்ளது. பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி பணிகளை செய்து வருகிறோம். அனைத்து பணிகளுக்கும் சொந்த பணத்தை செலவு செய்து வருகிறோம்.
நாங்கள் பணியில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரூ.14 ஆயிரம் சம்பளம் தவிர்த்து இதுவரை எவ்வித பணப்பலனும் இல்லாமல் பணியை முறையாக செய்து வருகிறாம். அரசு விடுமுறை நாட்களிலும் கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம். இதுபோன்ற அனைத்து பணிகளையும் செய்து வரும் நாங்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளதுடன் குடும்பத்துடன் கஷ்டநிலைக்கு ஆளாகி உள்ளோம்.
எனவே நகர்நல சுகாதார செவிலியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தயவுகூர்ந்து பணத்தொகை பலன்கள், மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும்.மேலும் சம்பள உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்து எங்களது குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் வழங்கினர்.
நகர்நல சுகாதார செவிலியர்களின் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சுப்பிரமணியம் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் கலந்து பேசி நகர்நல சுகாதார செவிலியர்களின் நலனை பாதூகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.