நாகர்கோவில், ஜூன் 16 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் அகமதாபாத் இடிஐஐ இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பினை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தில் வைத்து நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தக் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டும் சான்றிதழ் படிப்பு 2025 ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளது. கல்வியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பெறப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் ஆக ஆர்வமுள்ள இளைஞர்கள் https://www.editn.in /, Web-One-Year-Registration இணையதள இணைப்பு மூலம் விண்ணப்பித்து இந்தப் படிப்பில் சேர்ந்து பயனடையலாம். இந்தப் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.80 ஆயிரம் கட்டணமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐடிஐயில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள், சேரத் தகுதி உள்ளவர்கள் தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது தொழில் முனைவோர் குறித்த கல்வி திட்டம் ஆகும். எனவே தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கள அனுபவம், பொது போக்குவரத்தை அணுகக் கூடியது, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வணிக வளர் மையங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. கல்வி கட்டணத்திற்காகத் தேவைப்படும் மாணவர்களுக்குக் கட்டணத்திற்கான வங்கிக் கடன் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.editn.in ஐ பார்வையிடலாம். இந்த கல்வித் திட்டத்தில் இணைந்து விரைவில் தொழில் முனைவோராக ஆகுங்கள். இவ்வாறு செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.