நாகர்கோவில், ஏப். 20 –
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். வேர் கிளம்பி பகுதியில் பத்மநாபபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது பட்டாசுகள் வெடித்ததாகவும், போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பிரச்சாரம் செய்ததாகவும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் புகார் அளித்தார்.
அதன் பேரில் சரத்குமார், வேட்பாளர் ரமேஷ், அதிமுக மாவட்டச் செயலாளர் சுதர்சன், பாரதிய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஞ்சித் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


