தேனி, ஆகஸ்ட் 8 –
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் பெரியகுளம் வனச்சரக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
எனவே ரோந்து பணியின் போது பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டு யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனத்துறையினர் மற்றும் பெரியகுளம் வனத்துறையினர் இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்து இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரன், ஈஸ்வரன், பொன்ராஜ், பாலாஜி, மகாலிங்கம் உள்ளிட்ட ஐந்து நபர்களையும் பிடித்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்ட தந்தம் தேனி மாவட்ட வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதா? அல்லது கேரள வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதா? என்ற பல கோணங்களில் விசாரிப்பதோடு இதுபோன்று இவர்களிடம் மேலும் தந்தம் உள்ளதா எனவும், இதற்கு முன்பு எத்தனை தந்தங்கள் விற்பனை செய்துள்ளார்கள், மேலும் இவர்களிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.