தாம்பரம், ஜூலை 9 –
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 100 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மாநிலத் தலைவர் டாக்டர் செங்குட்டுவன், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் பிரபு தலைமையில் பொருளாளர் டாக்டர் கௌரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்திய மருத்துவ சங்க விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் மருத்துவத்துறையில் மகத்தான பணியாற்றிய தாராபுரத்தை சேர்ந்த டாக்டர் லோகநாயகி, டாக்டர் பிரபு, டாக்டர் சத்யா, கோபிசெட்டிபாளையம் டாக்டர் குமரேசன், குடியாத்தம் டாக்டர் சுதாகர், டாக்டர் கிருத்திகாதேவி உள்ளிட்ட 100 மருத்துவர்களுக்கு மூத்த குடிமக்கள், சிறந்த மருத்துவர், சிறப்பான சேவை செய்தவர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதிலுமிருந்து பல மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
மாநில செயலாளர் எஸ். கார்த்திக் பிரபு கூறுகையில்: மருத்துவர் மட்டுமல்லாமல் வெஸ்ட் பெங்கால் சீப் மினிஸ்டராக இருந்தவர். அதனால் எல்லா மாவட்டத்திலிருந்து டாக்டர்களை தேர்வு செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நாளன்று மருத்துவர்களுக்கான சேவை செய்வதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருது பெற்றது குறித்து மருத்துவர் லோகநாயகி கூறுகையில், விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஊக்கம் அளிக்கிறது என தெரிவித்தார்.