விழுப்புரம், ஆகஸ்ட் 11 –
விழுப்புரம் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள மகாராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தினம் தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day) 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்வாக, இன்றைய தினம், விழுப்புரம் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள மகாராஜபுரம் அங்கன்வாடி மையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி, முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1781 அங்கன்வாடி மையங்களிலும், 1728 பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 6,79,271 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,65,958 பெண்களுக்கும் ஆக மொத்தம் 8,45,229 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடிமையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 mg கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 mg கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படும்.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமா உதவுகிறது.
இப்பணிகளில், பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோசித்ரா, மாவட்ட தாய், சேய் நல அலுவலர் அம்பிகா, கீழ்ப்பெரும்பாக்கம் மருத்துவ அலுவலர் .ஜோதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



