தென்காசி, ஜூலை 19 –
தென்காசி மாவட்ட குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா) மற்றும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. 20க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று தங்களது தொழில் அனுபவங்கள், வெற்றி ரகசியங்களைப் பகிர உள்ளனர்.
இந்தக் கண்காட்சியின் தொடக்க விழா 19-ம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. டெம்சியா தலைவர் அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. டெம்சியா நிறுவனர் ஆதரவாளர் அழகுராஜா, ஆலோசகர் ராமன், துணைத்தலைவர்கள் முருகேசன், வெங்கடேஷ்ராஜா, வாய்ஸ் ஆப் தென்காசி தலைமை நிர்வாக அதிகாரி காருண்யா குணவதி, பிரிவு தலைவர்கள் டாக்டர் சங்கிலி விக்ரம்குமார், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் குமரவேல், யெல்டி சாஃப்ட்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். முதன்மை விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். இந்த கண்காட்சியின்போது தொழில் முனைவோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறு தொழில் புரிவோர், வெற்றிபெற்ற தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து கலந்து ஆலோசிக்கும் வாய்ப்பினைப் பெறலாம்.
மேலும் வணிகச் சிக்கலுக்கான தீர்வு, நேரடி ஆலோசனை, கலந்தாய்வுகள், புதுமைத்தொழில்கள், கிராமப்புறத் தொழில்கள், தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேச உள்ளனர். தென்காசி மாவட்ட தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் 2 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று டெம்சியா தலைவர் அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.