தென்காசி, ஆக. 11 –
தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் அல்லாத மகளிருக்கும், அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து மாத்திரை வழங்கப்படும். 1 வயது முதல் 19 வயது வரையிலான 3,08,483 நபர்கள், 20 வயது முதல் 30 வயது வரையிலான 68,595 நபர்களுக்கும் என மொத்தம் 3,77,078 நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்கு (18.08.2025) திங்கள்கிழமை அன்று மாத்திரை வழங்கப்பட உள்ளது. மேலும் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயது முதல் 19 வயதிலானவர்கள் மற்றும் 20 -30 வயது வரையிலான மகளிர்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். குடற்புழுவால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத் திறன், உடற் வளர்ச்சி மேம்படவும், ஆரோக்கியமாக இருக்கவும் இம்மாத்திரை உதவுகிறது.
எனவே, முகாம்களில் தங்களது குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிரை அழைத்து வந்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம். இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் விஜயலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் கோவிந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் முத்து மாரியப்பன், வடகரை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தராம்பாள், மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அன்புமணி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



