திருவெண்ணெய்நல்லூர், ஆக. 05 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏனாதிமங்கலம், எரளூர், ஏமப்பூர், சிறுவானூர், ஆலங்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தலைமை தாங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று முகாமை ஆய்வு செய்தார். அப்போது இரண்டு பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு, இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.