திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 09 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி காசியம்மாள்(73). இவரது மகனும் மருமகளும் நேற்று முன்தினம் சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததால் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார் காசியம்மாள். எதிர்பாராத விதமாக சேலையின் முந்தானையில் தீப்பிடித்து உடல் முழுவதும் எரிந்து வலியில் துடித்தார்.
இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காசியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு 10:40 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.