திருப்போரூர், ஆகஸ்ட் 01 –
திருப்போரூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1886-ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், இ.சி.ஆர். சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தை நான்காக பிரிக்க பதிவுத்துறை முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பியது.
இதையடுத்து திருப்போரூர் அலுவலகத்தை திருப்போரூர், வண்டலூர், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது முதற்கட்டமாக நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு புதிய சார்பதிவகங்களையும் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த இரண்டு அலுவலகங்களும் செயல்பாட்டு வந்துள்ளது. இதுமட்டுமின்றி பதிவுத்துறைக்கு தையூர் கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் அமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளில் இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களும் இந்த வளாகத்தில் செயல்படும் என தெரிகிறது.
கேளம்பாக்கம் சார்பதிவகத்திற்கு மாற்றப்படும் கிராமங்கள் கேளம்பாக்கம், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம், தையூர் அ, தையூர் ஆ, வெளிச்சை, கொளத்தூர், காயார், கோவளம், திருவிடந்தை, குன்றுக்காடு, செம்மஞ்சேரி, நெம்மேலி, கிருஷ்ணன்காரணை, சாலவான்குப்பம் ஆகிய கிராமங்கள், நாவலூர் சார்பதிவகத்திற்கு மாற்றப்படும் கிராமங்கள், நாவலூர், காரணை, சிறுசேரி, தாழம்பூர், படூர், கானத்தூர் ரெட்டிக்குப்பம், கழிப்பட்டூர், ஏகாட்டூர், முட்டுக்காடு ஆகிய கிராமங்கள்.
இவை தவிர மற்ற கிராமங்கள் அனைத்தும் திருப்போரூர் சார்பதிவகத்திலேயே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சார்பதிவகம் வண்டலூர் சாலையில் உள்ள தமிழ் அன்னை சமுதாயக்கூடத்திலும், நாவலூர் சார்பதிவகம், தாழம்பூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடத்திலும் தற்காலிகமாக செயல்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ உட்பட ஊர் தலைவர்கள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.