கருவம்பாளையம், ஜூலை 16 –
திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் 20-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 18-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் குமார்சண்முகம், செயலாளர் ராஜசேகரன், கண்காட்சியின் தலைவர் பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் மஹாலில் 20-வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 18-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் கட்டுமான பொருட்களை பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையிலும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் பிற மாநிலங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள புதிய ரக டைல்ஸ், சானிட்டரி வேர், முன்னணி நிறுவனங்களின் மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் கிரானைட் மார்பில்ஸ், மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகள், பேவர் பிளாக் நவீன கற்கள், புதிய பெயிண்ட் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கட்டுமான துறை சேர்ந்தவர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். பொதுமக்கள் தரமான பொருட்களை நேரடியாக கண்டு புதிய கட்டுமான தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த கண்காட்சியில் 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக விசாரணை நடைபெறும்.
தமிழகத்தில் 40 சதவீதம் வரை கட்டுமான பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு முறை ஆர்ப்பாட்டமும், பலமுறை மனுக்கள் கொடுத்தும், முதலமைச்சருக்கும் மனு அனுப்பியும் உள்ளோம். ஆனால் தற்போது வரை கட்டுமான பொருட்கள் விலை குறைப்பிற்கான தீர்வு எதுவும் எட்டவில்லை. இதனால் கட்டுமான தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுமான துறையை காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.