கமுதி, ஆகஸ்ட் 03 –
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஆலயத்தில் தேசிய தேவர் பேரவையை தொடங்கிய தேவர் பேரவை தலைவர் செந்தூர்பாண்டியன். செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் தேவர் சமூகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். திமுக மற்றும் அதிமுக எதிர்கட்சியாக இருக்கும் போது மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படும் என்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் தேவர் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் சீர்மரபினர் விடுதி எப்போது கலைக்கப்பட்டு பிற்பட்டோர் நல வாரியத்தில் இணைக்கப்பட்டது என்பதே தெரியாத வகையில் மாநில அரசு செயல்பட்டுள்ளது. ஒரு சமூகத்திற்கு 2 ஜாதி சான்றிதழ் மத்திய அரசு டிஎன்டி எனவும், மாநில அரசு டிஎன்சி எனவும் வழங்குகிறது. மாநில அரசும் டிஎன்டி என ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தேவர் சமுதாயம் சுதந்திர போராட்டத்தில் அதிக இழப்பீடுகளை சந்தித்தும் ஆட்சியாளர்களால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இராமநாதபுரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரிக்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி பல ஆண்டுகள் ஆகியும், எத்தனையோ மாவட்டங்கள் பிரிக்கப்பட்டும் ராமநாதபுரம் மாவட்டம் ஏன் பிரிக்கப்படவில்லை. தேவர் சமுதாயம் திமுக அதிமுக ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதால் நோட்டாவுக்கு ஓட்டுகேட்போம் என அவர் இவ்வாறு கூறினார்.