நாகர்கோவில், ஜூன் 2 –
உலக மருத்துவ தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் மருத்துவ தினம் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் பல இடங்களில் மருத்துவ தின விழாக்கள் நடைபெற்றது.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியில் நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு செவிலியர்கள், பணியாளர்கள் பூங்கொத்து கொடுத்து மருத்துவ தினத்திற்கு பெருமை சேர்த்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: உலக மருத்துவ தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், மத்திய, மாநில அரசுகள் கூறுவது போல கிராம புறங்களில் சென்று மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் ஆனால் நகர புறங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், மருத்துவர்களுக்கான சலுகைகள், ஊதிய வசதிகள் எதுவும் கிராம புறங்களில் அரசு தரப்பில் செய்யப்படவில்லை.
எனவே, தான் கிராமபுறங்களுக்கு மருத்துவர்கள் செல்ல தயங்குவதாகவும், மருத்துவ தொழில் என்பது காலம், நேரங்களை கடந்த சேவை பணி; இதில் நம் குடும்பங்களுடன் நாம் இருக்கும் நேரம் மிக குறைந்து விட்டதால் இது போல் தங்கள் குழந்தைகள் இருக்க விரும்பவில்லை. எனவே, மருத்துவர்களின் வாரிசுகள் இதே போன்று மருத்துவ தொழிலுக்கு வர தயங்குவதாக கூறினார்.
மேலும் நாடி மருத்துவம், நரம்பியல் மருத்துவத்தை தொடர்ந்து நவீன மருத்துவ உலகில் நாம் வந்து விட்டோம். ஆனால் தற்போது யூ டியூப் மருத்துவம் தலைதூக்கி வருகிறது. இது பொது மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே விழிப்புணர்வுடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.