களியக்காவிளை, செப். 19 –
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி செப்டம்பர் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைகிறது. தர்ம ரக்ஷ்ண சமிதியானது தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் துவங்கப்பட்டு ஓம்காரநந்தா சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகளால் வழிநடத்தப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் ஐயப்ப சங்கமம், ஸத் சங்கம், பஜனை, ராமாயண ஞான வேள்வி, சரஸ்வதி நாம ஜெப வேள்வி, சித்திரை புத்தாண்டு வாழ்த்து, சிவ நாம அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வருடம் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடத்தப்படுகிறது. இந்த வேள்வியானது ஒவ்வொரு இந்து கோயில்களிலும் இந்த வருடம் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்படுகிறது. வேள்வியின் முதல் 3 நாட்கள் தேவியை துர்க்கா தேவியாக பாவித்து பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் தேவியை லெட்சுமி தேவியாக பாவித்து பூஜைகள் நடக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் தேவியை சரஸ்வதி தேவியாக பாவித்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு நாள் கன்னிகா வந்தனம் என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் சுமார் 600 கோயில்களில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடக்கிறது. சரஸ்வதி நாம ஜெப வேள்வி நிறைவு விழா அக்டோபர் 26-ம் தேதி மார்த்தாண்டம் ஆதி முலை அம்மன் கோயிலில் வைத்து நடக்கிறது. இதில் வித்தியார்த்தி ஹோமம், அனுபவங்கள் பகிர்தல், ஆன்மிக உரை, சரஸ்வதி அஸ்டோத்ர சதாநாம அர்ச்சனை, குழு பாடல் போட்டிகள், பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


