தருமபுரி, ஜூன் 20 –
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 36 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வீடு இல்லாத இவர்களுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 வீடுகள் கட்டுவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டது. இதில் 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள இரண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. இந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் இருளர் மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். குழந்தைகளை அங்கன்வாடி பள்ளிக்கு அனுப்புமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது கட்டுமானப் பணிகள் முடிவடையாத இரண்டு வீடுகளுக்கு முன்பு சென்ற ஆட்சியர் காலதாமதம் பற்றி கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி, உதவியாளர், ஊராட்சி செயலாளர் மற்றும் பொறியாளர் ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து கட்டுமானப் பணியை குறித்த நேரத்தில் முடிக்காதது ஏன்? என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் தொங்கு பாலம், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, உடை மாற்றும் அறை, நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இடங்களை தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத வண்ணமாகவும் வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா மூர்த்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், உதவி சுற்றுலா அலுவலர் கதிரேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.