நாகர்கோவில், செப்.12-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவினர் (2024-2026) இன்று குமரி மாவட்டம் வருகை தந்தனர். தொடர்ந்து குழுவின் தலைவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரியில் அமைந்துள்ள பெரியநாயகி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிக்காக ரூ.2600 இலட்சத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு அதன்படி ஐ ஐ டி சென்னை மூலமாக தூண்டில் வளைவு நீடிக்கும் பணி 235 மீட்டரிலும், வலை பின்னும் கூடமும் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் புத்தேரியில் நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் சாலை அமைத்தல் பணிகள் ரூ.141 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. தற்போது 56 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. 2026 ஏப்ரலில் இப்பணிகள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவமனையானது 2007ம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும், 2009-2010 கல்வியாண்டிலிருந்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சராசரியாக 350-400 வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
இங்கு பக்கவாதம், முடக்கு வாதம், ஆறாத நாள்பட்ட புண்கள், மூலம், பௌத்திரம், மூத்திரக்கல், தோல் நோய்கள், இளம் பிள்ளை வாதம், ஆட்டிசம், வளர்ச்சி குறைப்பாடு உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த சிகிட்சை வழங்கப்படுகிறது. தேவை அடிப்படையில் கூடுதலாக 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து கன்னியாகுமரி (ஆசாரிப்பள்ளம்) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மையம் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது. இருப்பில் வைத்துள்ள உபகரணங்களை அனைத்தையும் பொருத்தி சிகிச்சை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது இயற்கையோடு இணைந்த மருத்துவமனையாக உள்ளது. இங்கு மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிட மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக கூடுதலாக இருக்கை வசதிகளை ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகிறார்கள். எனவே பொதுமக்களின் கோரிக்கையான எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் த.வேல்முருகன் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் குழு உறுப்பினர்கள் இரா. அருள் (சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்), சா. மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), எம்.கே. மோகன் (அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



