கிருஷ்ணகிரி, ஜூன் 22 –
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி டான்சில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக துவங்கிய மராத்தான் போட்டியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியானது லண்டன் பேட்டை, புதிய பேருந்து நிலையம், நேதாஜி ரோடு, பழையப்பேட்டை காந்தி சிலை, தர்மராஜா கோவில், BSNL அலுவலம், ஆர்.சி.பள்ளி, பெங்களூர் சாலை வழியாக சென்று மீண்டும் டான்சி வளாகத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில்
வெற்றிப் பெற்றவர்களுக்கு மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் ரொக்கப் பரிசுகள் மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்ட நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாரத்தான் போட்டியில் முன்னாள் சேர்மன் மது ஹேம்நாத், உறுப்பினர் சேர்க்கை அணி பிரகாஷ், மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஹரிஸ், மாவட்ட பொருளாளர் முருகேசன், வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவி இந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமபிரியா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருள்குமார், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பார்த்திபன், இணை அமைப்பாளர் பாரதி, சிபிஐ சச்சின், வேலன், நகர கழகம் ஹரிபிரசாந்த் மற்றும் தவெக நிர்வாகிகளான தென்னரசு, வேலன், தொழிலதிபர் கோல்டன் சுரேஷ், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



