வாடிப்பட்டி, ஜூலை 04-
இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. கிராமங்கள் பல்வேறு வளர்ச்சி காண வேண்டுமென்று கனவு கண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 நாள் வேலை கட்டாயமாக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உயிர் நாடியான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் கண்மாய், குளங்கள், ஏரிகள் சீரமைக்கும் பணியும் ஓடைகள், கால்வாய்கள் வாய்க்கால் பராமரிக்கும் பணிகளும் செய்வதை முக்கிய குறிக்கோளாக கொண்டு கிராம மக்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் கட்டாய வேலை வாய்ப்பு
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பணியாளர்களை பயன்படுத்தி கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்ட பணிகளான நீர் ஆதாரம் பெருக்க சிறு தடுப்பணை, புதிய ஓரடுக்கு சாலை, பேவர் பிளாக் சாலை, ரேசன் கடை, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது, சுற்றுச் சுவர் எடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சமுதாய கூட கட்டிடம், சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிகள் முடிந்து கட்டிடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் இதனால் பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருந்து வருகிறது என்று ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் புதிதாக வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதியின்றி ஒப்பந்ததாரர்கள் அவதிக்கு ஆளாகி வருவதால் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட பணிகள் நிதி இன்றி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு வேறு பலத்திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து வருகிறது. இதில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் மூலம் நிதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளில் நிலுவைத் தொகை முடக்கப்பட்டதால் கடனாளிகளாக மாறி தற்போது அந்த கடனையும் திருப்ப செலுத்த முடியாத நிலையில் வேதனைக்கு ஆளாகப்பட்டுள்ளனர்.
இதனால் கட்டுமான பணி தவறித்து மற்ற வேலைகள் செய்யும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் மேலும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் வெந்து நெந்து போய் உள்ளனர். எனவே, மத்திய மாநில அரசுகள் நிலுவையில் உள்ள நிதியை வழங்க உடனடியாக முன்வர வேண்டும் என்றும் மகாத்மா காந்தி பெயரில் திட்டம் தொடங்கி அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சத்திய சோதனை செய்யாமல் நிலுவையில் உள்ள நிதியினை விடுவிக்க வேண்டும் என்றும் பாதியில் நின்ற வளர்ச்சி திட்ட பணிகள் இனி தொடர்ந்து நடந்திட இதுபோல் தடைகளை இனி உருவாக்க வேண்டாம் என்றும் அரசு பணி கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்கம் மூலம் தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.