தஞ்சாவூர், ஜூலை 29 –
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார். தஞ்சாவூர் ராஜா அரசு மருத்துவ மனையில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் சலவை எந்திரம் மற்றும் துணி உணர்த்தும் எந்திரம், ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் நோயாளிகள் உடனிருப்பவர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 3,000 நபர்கள் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ரூபாய் 1,000 நோயாளிகளின் வங்கிக் கணக்கில் ஊட்டச்சத்திற்காக வழங்கப்படுகிறது. காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் உதவித்தொகை மட்டுமில்லாமல் தனிநபர் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருள்களின் தொகுப்பு நிக்கே மித்ரா என்னும் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த ஊட்டச்சத்து தொகுப்பில் சத்து மாவு 1 கிலோ, கொண்டக்கடலை 1 கிலோ, பேரீச்சம் பழம் 100 கிராம் உள்ளிட்டவை அடங்கிய பொட்டலங்கள் 600 காச நோயாளிகளுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.