தஞ்சாவூர், ஆகஸ்ட் 5 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் யூத் ரெட்கிராஸ் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரெட்கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட கிளை மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து 76 வது ஆண்டு ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகளை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் மாவட்ட கிளையின் சேர்மன் மருத்துவர் வரதராஜன் தொடங்கி வைத்தார். செயலாளர் கலைச்செல்வன், பொருளாளர் ஷேக் நாசர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
ரெட் கிராஸ் மற்றும் அதன் இன்றைய முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தற்கொலை தடுப்பு மற்றும் போதை பொருள் நுகர்வு தடுப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெற்றவர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
முன்னதாக மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியரும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான முனைவர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வேதியல் துறை இணை பேராசிரியரும், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலருமான முனைவர் சித்திரவேல் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரியில் இருந்து யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள், மன்னர் சரபோஜி கல்லூரி யூத் ரெட்கிராஸ் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



