தஞ்சாவூர், ஜூலை 11 –
தமிழ்நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 125 பெண்கள் உள்பட 635 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலம் காந்திஜி சாலை, ரெயிலடி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலர் சேவியர், ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட செயலர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் ராஜன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யூ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மறியல் போராட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், போக்குவரத்து, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது. தொழிலாளர்களுக்கு எதிராக நான்கு சட்ட தொகுப்புகள் கைவிடப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 242 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தில் 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 125 பெண்கள் உள்பட 635 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.