தஞ்சாவூர், ஆக. 3 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடை பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 601 பேருக்கு பணி உறுதி கடிதங்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினார்கள். திருமங்கலக்குடி தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வே கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3489 பேர் கலந்து கொண்டனர். 103 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் 601 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி உறுதி கடிதங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 314 பேர்களும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 32 பேர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் அமைச்சர் சி.வி கணேசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 329 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 இலட்சத்து 65 ஆயிரம் தனியார் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப . தமிழழகன் ,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் உதவி கலெக்டர் ஹிருத்யா எஸ். விஜயன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி கள் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்