தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஏராளமான பெண்கள் வழிபட்டனர். இவ்விழாவையொட்டி திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் ஏராளமானோர் காவிரி தாய்க்கு படையல் செய்து வழிபாடு நடத்தினர்.
இதில் கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து காவிரித்தாயை வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி போன்றவற்றை வைத்து வழிபட்டு ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதியினர் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். சிறுவர்கள் அம்மன் படத்துடன் கூடிய பொம்மை தேர்களை இழுத்து வந்து வழிபாடு செய்தனர். மேலும் ஐயாரப்பர் கோவிலில் இருந்து அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாரப்பர் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபத்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி அருளினார்.