தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்தில் மாணவ, மாணவியர்கள், குழந்தைகள், இல்ல பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரியில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலால் உதவி ஆணைய ரேணுகாதேவி, கோட்டகலால் அலுவலர் சுஜாதா, துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா, இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அசோக், ரஞ்சித், சரபோஜி கல்லூரி முதல்வர் சுமதி, போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மலர் வண்ணன், உறுப்பினர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.