தஞ்சாவூர், செப்டம்பர் 17 –
இணையவழி மூலம் தொலைதூர மருத்துவமனைகளுக்கு செல்லாமல் கர்ப்பிணிகள் டாக்டர்களின் ஆலோசனைகளை பெறும் சேவையினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தொலைதூர மருத்து வமனைக்கு செல்லாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே இணைய வழி மூலம் டாக்டர்களில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் இணைய வழி சேவையினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
அதன்படி கர்ப்பிணிகளின் சிறப்பு சிகிச்சைக்காக தஞ்சாவூர் கோட்டம் கும்பகோணம் கோட்டம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டம் ஆகிய இடங்களுக்கு ஒரு மகப்பேறு மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் ஆகியோரால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சிறப்பு கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு இணையவழி ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் கோட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி முன்னிலையிலும் பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தில் டாக்டர் அன்பழகன் முன்னிலையிலும் கர்ப்பிணிகளுக்கு இணைய வழி ஆலோசனை தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் தைராய்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் பொது மருத்துவர்களால் இணைய வழி ஆலோசனை வழங்கப்பட்டது.



