இராமேஸ்வரம், ஜூலை 26 –
தங்கச்சிமடம் வேர்க்காடு மத நல்லிணக்க தூய சந்தியாகப்பர ஆலயத்தின் 483-ம் ஆண்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் மும்மதத்தினர்கள் கலந்து கொண்டனர். தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள தூய சந்தியாகப்பர் ஆலயம் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களின் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தப்படும் மத நல்லிணக்கத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சந்தியாகப்பர் 483-ம் ஆண்டு திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக சந்தியாகப்பர் திருத் தேரோட்டம் நடைபெற்றது. சந்தியாகப்பர் ஆலயத்திலிருந்து திருத்தேர் எடுத்து வரப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
இதில் காணிக்கையாக மெழுகுவர்த்தி தென்னங்கன்று கொண்டு வழிபாடு நடத்திய பின்பு சிறப்பு திருப்பணி நடைபெற்று புனித சந்தியாகப்பர் ஆலயம் தேர்பவனி நடைபெற்றது. இந்த விழாவில் புதிய ஆலய கட்டுமானப் பணி பொறுப்பாளர் அருள்பணி ச. செபாஸ்டின், விழாக்குழு தலைவர் செ. ஜேம்ஸ் அமல்ராஜ், தண்ணீர்ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா இறைமக்கள், விழாக்குழுவினர், தீவு பூர்வீக கிறிஸ்தவர்கள், புனித குழந்தை தெரசாள் ஆலய கமிட்டி, புனித தெரசாள் பங்கு திருச்சிலுவை அருள் சகோதரிகள், கப்புச்சின் அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.