தக்கலை, ஜூலை 9 –
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு ஷைனி ப்ரியாவும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தம் முதல் அனைத்து நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. பின்னர் நேற்று முன்தினம் 7-ம் தேதி தக்கலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. ஷைனி பிரியாவும் நண்பர்கள் தோழிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 6-ம் தேதி தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்ற ஷைனி பிரியா மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அவரது செல்ஃபோனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து மணமகன் வீட்டார் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் மணப்பெண்ணை தேட தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று இது குறித்து மணப்பெண் சகோதரன் சஞ்சீவ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இளம்பெண் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஷைனி பிரியாவின் செல்போன் நம்பரை போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஷைனி பிரியாவின் செல்போனிலிருந்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபர் வருவருடன் ஷைனி பிரியா மணக்கோலத்தில் இருந்தார். கோயில் ஒன்றில் வைத்து இந்த திருமணம் நடந்தேறி உள்ளது. இந்த போட்டோவை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஷைனி பிரியா தன் உறவினர்களுக்கு மட்டுமின்றி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளைக்கும் இந்த போட்டோவை அனுப்பி வைத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஷைனி பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலை கைவிட்டது போல் நடித்து கடைசி நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஷைனி பிரியா திருமணம் செய்த வாலிபர் பற்றிய விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்த போட்டோவை போலீசாரிடம் காட்டி தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தற்போது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.