சோழவந்தான், ஆகஸ்ட் 9 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக விக்கிரமங்கலம் பகுதி, குருவித்துறை பகுதி, மேலக்கால் பகுதியில் விஷக்கடி மற்றும் நாய்க்கடி போன்ற நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பகுதியில் விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறும் பொழுது உடன் வந்தவர்கள் அங்கு ஆஸ்பத்திரியில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இது மட்டுமல்லாது கூச்சல் போட்டு சத்தம் போடுகின்றனர். இதனால் மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள், மருத்துவர்கள், உள்நோயாளிகள் பயத்துடன் சில நேரங்களில் காணப்படுகின்றனர்.
ஏற்கனவே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் இருந்த போதும் தற்போது சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரிடமும் சோழவந்தான் பகுதி கிராம மக்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு நிரந்தரமான போலீசார் நியமித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்த எம்எல்ஏக்களும் பொதுமக்களிடம் ஆஸ்பத்திரிக்கு நிரந்தரமான போலீஸ் நியமிக்க காவல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர் . ஆனால் இதுவரை சோழவந்தான் அரசு மருத்துவமனை பாதுகாப்பிற்கு போலீஸ் நியமிக்கப்படவில்லை.
தற்போது ஆஸ்பத்திரி விரிவாக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் விரிவாக்கம் செய்யக்கூடிய பணியில் புறக்காவல் நிலையத்திற்கு அறை ஒதுக்க மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையை சேர்ந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.